நேப்பாளத்திற்கு இந்தியா 2 பில்லியன் வெள்ளி உதவி

நேப்பாளத்திற்கு இந்தியா 2 பில்லியன் வெள்ளி உதவி

1 of 2
படம்: இபிஏ
படம்: ராய்ட்டர்ஸ்

23 Nov 2026 - 6:36 pm

2 mins read

புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேப்பாளத்திற்கு 240 பில்லியன் நேப்பாள ரூபாய் ($2 பில்லியன்) மதிப்பிலான பொருளியல் உதவித் தொகுப்பை இந்தியா வழங்கவிருக்கிறது.

புதுடெல்லியில் நேப்பாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (நவம்பர் 23) இதனைத் தெரிவித்தார்.

மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு முதலாவது இருதரப்புப் பயணமாகத் திரு ஷா இந்தியத் தலைநகருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் கிட்டத்தட்ட 1,500 பேர் உயிரிழந்தனர்; 5,200 பேர் காணாமல் போனதுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

“நேப்பாளத்தின் மறுநிர்மாணத்திற்கும் நீண்டகால வளர்ச்சிக்கும் புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், 240 பில்லியன் நேப்பாள ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி ஒத்துழைப்புத் தொகுப்பை இன்று அறிவிக்கிறோம்,” என்று திரு மோடி செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் சீராக்கவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், எதிர்காலப் பேரிடர்களைச் சமாளிக்கும் நேப்பாளத்தின் திறனை வலுப்படுத்தவும் இந்தியா உறுதியளித்துள்ளது.

இயற்கைப் பேரிடர்கள், இக்கட்டான நேரங்களில் முதலில் விரைந்து உதவும் நாடாக இந்தியா தொடர்ந்து செயல்படுவதற்குத் திரு ஷா நன்றி தெரிவித்தார்.

“வரும் நாள்களில் இரு நாடுகளின் பொருளியல் வளத்தில் பங்குகொள்ள இந்திய முதலீட்டாளர்களை நேப்பாளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்,” என்று கூறிய அவர், நேப்பாளத்திற்கு வருகை தருமாறு திரு மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்திக்கும் நேப்பாளத்தின் ஜனக்பூருக்கும் இடையே ரயில் சேவையைத் திரு மோடியும் திரு ‌ஷாவும் புதுடெல்லியில் இருந்து காணொளி வாயிலாகக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர்.

இந்தச் சரயு-கமலா விரைவு ரயில் வாரத்திற்கு ஒருமுறை இந்தியாவையும் நேப்பாளத்தையும் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து முதல் சேவை திங்கட்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையிலான தொலைவு ஏறக்குறைய 600 கிலோமீட்டர்.

நேப்பாளத்தில் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வெளிநாட்டு வளாகம் ஒன்று நிறுவப்படும் என்று திரு மோடி அறிவித்தார். அத்துடன் புதிய நிறுவன வளர்ச்சி நிலையம், புத்தாக்க நடுவம் ஆகியவையும் அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

“நேப்பாளத்தின் இளைய தலைமுறையினர் திறமை, ஆற்றல், பெரிய கனவுகள் நிறைந்தவர்கள். அவர்களின் கனவுகளை நனவாக்குவதில் பங்குதாரராகச் செயல்பட இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

குறிப்புச் சொற்கள்