புதுடெல்லி: அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்ட பொருளியலுக்கான பட்டியலில் இந்தியா ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு இந்தியா ஐந்தாம் இடத்தில் இருந்தது. எனினும், அண்மையில் உலக அளவில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக, இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆறாம் இடத்தில் இருந்து பிரிட்டன் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்தியா இந்தப் பட்டியலில் பின்தங்க, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தது முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படை ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டதும் மற்றொரு காரணம் எனத் தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்தியப் பொருளியல் வேகமாக முன்னேறியதை அடுத்து, நான்காம் இடத்தில் இருந்த ஜப்பானை விஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
அனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கைப்படி, கடந்த 2024ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.76 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தி 3.7 டிரில்லியன் டாலராகும்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு இந்திய ஜிடிபி மதிப்பு 3.92 டிரில்லியன் டாலராகவும் பிரிட்டன் 4 டிரில்லியன் டாலராகவும் பதிவாகின.
இந்தியாவின் பொருளியல் நிலையாக இருப்பதாகக் கருதப்பட்டாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதைத் தடுக்க முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.59 வரை சரிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் டாலருக்கு எதிரான பிரிட்டன் பவுண்ட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது.
எனவே, பணப்பரிமாற்ற விகித அடிப்படையில், தற்போது பெரிய பொருளியல் கொண்ட நாடுகளின் மத்தியில், இந்தியாவுக்கு ஆறாம் இடமே கிடைத்துள்ளது.
அதேசமயம் வரும் மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்டு பிரிட்டன், ஜப்பான் நாடுகளை விஞ்சி இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறும் என்றும் எதிர்வரும் 2031ஆம் ஆண்டு ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை அடையும் என்றும் பொருளியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

