கடத்தப்பட்ட 615 அரிய தொல்பொருள்களை மீட்ட இந்தியா

கடத்தப்பட்ட 615 அரிய தொல்பொருள்களை மீட்ட இந்தியா

படம்: தினமலர்

22 Jul 2026 - 4:22 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குக் கடத்தப்பட்ட 615 அரிய தொல்பொருள்களை அந்நாட்டு அரசு வெற்றிகரமாக மீட்டுள்ளது.

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட கலைப்பொருள்களில் தமிழகத்தைச் சேர்ந்தவைதான் அதிகம்.

அவற்றை அனைத்துலகக் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாகத் திருடி வெளிநாடுகளில் பலகோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

குறிப்பாக, தமிழகக் கோவில்களில் உள்ள பழங்காலத் தெய்வச் சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு.

கடத்தல் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து தமிழகக் காவல்துறையின் சிலைக் கடத்தலைத் தடுப்பதற்காகவே தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பிரிவு இந்திய அரசின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சிலைக் கடத்தலைத் தடுத்தது மட்டுமல்லாமல், பல அரிய தொல்பொருள்களைப் பல்வேறு நாடுகளுக்கு மீட்டு வருவதிலும் கவனம் செலுத்தியது.

இந்திய அரசும் கடந்த காலங்களில் தங்கள் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிலைகள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 615 தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்