தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘உளவு’ புறாவை விடுவித்த இந்தியா!

1 mins read
272a7185-17ec-46f3-bb45-7e8a32af1e0b
மும்பையிலுள்ள பாய் சக்கர்பாய் தின்ஷா பெட்டிட் விலங்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.பி.குல்கர்னி புறாவை விடுவிக்கிறார். - படம்: பீட்டா இந்தியா

மும்பை: சீனாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு எட்டு மாதங்களாக இந்தியக் காவல்துறையின் பிடியிலிருந்த புறா, குற்றம் உறுதிப்படுத்தப்படாததால் சுதந்திரப் பறவையானது.

அப்புறாவின் இறகுகளில் சீன எழுத்துகளைப் போன்று எழுதப்பட்ட குறிப்புகள் இருந்ததாகக் கூறி, இந்தியாவின் மும்பை மாநகரில் அப்புறா பிடிபட்டது.

காவல்துறை விசாரணை இடம்பெற்ற காலத்தில், மும்பையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அப்புறா அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த விசாரணை எட்டு மாதங்களுக்கு நீடித்தது வியப்பளிக்கிறது என்று விலங்குநல அமைப்பான ‘பீட்டா’வின் இந்திய அலுவலகம் வியாழக்கிழமை (ஜனவரி 1) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.

இந்நிலையில், அப்புறாவை விடுவிக்க காவல்துறை புதன்கிழமையன்று முறையான அனுமதி வழங்கியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

உளவு பார்த்ததாகக் கூறி இதற்கு முன்னரும் இந்தியாவில் புறாக்கள் பிடித்து வைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் செய்தியுடன் வந்த ஒரு புறாவை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்தனர்.

அதற்குமுன் 2010ஆம் ஆண்டிலும், பாகிஸ்தான் தொலைபேசி எண்ணும் முகவரியும் சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்த ஒரு புறா அதே பகுதியில் பிடிபட்டது.

குறிப்புச் சொற்கள்