ஹாங்காங்: சீனக் குடிமக்களுக்குச் சுற்றுலா விசா வழங்கும் நடைமுறையை வியாழக்கிழமை (ஜூலை 24) மீண்டும் தொடங்கவிருப்பதாகச் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் சீனக் குடிமக்களுக்குச் சுற்றுலா விசாவை வழங்கவிருக்கிறது.
சீனாவும் இந்தியாவும் இருதரப்பு உறவுகளைச் சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் வேளையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டில் இமயமலைப் பகுதியில் இரு நாட்டு ராணுவங்களும் மோதிக்கொண்டதை அடுத்து பதற்றம் அதிகரித்தது.
அதைத் தொடர்ந்து, சீன முதலீடுகளுக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்தது. மேலும், கைப்பேசிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான சீனச் செயலிகளை அது தடை செய்தது.
கிட்டத்தட்ட அதேநேரத்தில், கொவிட்-19 கிருமிப் பரவலை முன்னிட்டு இந்தியக் குடிமக்களுக்கும் இதர வெளிநாட்டினருக்கும் விசா வழங்குவதைச் சீனா தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
2022ல் மாணவர்களுக்கும் வர்த்தகப் பயணிகளுக்குமான விசா வழங்கும் நடைமுறை மீண்டும் தொடங்கியது. இருப்பினும், இந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் வரை, இந்தியக் குடிமக்களுக்குச் சுற்றுலா விசாக்கள் வழங்கப்படவில்லை.
இரு நாடுகளும் நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் இணக்கம் கண்டதை அடுத்து இருதரப்பு உறவுகள் சீரடையத் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
பெய்ஜிங்கில் புதன்கிழமை (ஜூலை 23) பேசிய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், இந்தியாவுடன் தொடர்பையும் கலந்தாலோசனைக் கூட்டங்களையும் தொடரச் சீனா விரும்புவதாகக் கூறினார்.