ஆயுத இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இந்தியா: ஆய்வு

ஆயுத இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இந்தியா: ஆய்வு

கோப்புப் படம்: ஏஎஃப்பி

09 Mar 2026 - 8:04 pm

2 mins read

ஸ்டாக்ஹோம்: உக்ரேனுக்கு அடுத்தபடியாக, உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனத்தின் (SIPRI) 2025ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 2021-2025 காலகட்டத்தில் அனைத்துலக மொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா 8.3 விழுக்காடும், உக்ரேன் 9.7 விழுக்காடும் இறக்குமதி செய்துள்ளன.

வலுவான பொருளியல் நாடாகத் திகழும் இந்தியா, இவ்வளவு பெரிய அளவில் ஆயுதங்களை வாங்குவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா தனது ஆயுதத் தேவையில் 40 விழுக்காட்டை ரஷ்யாவிடமிருந்தும், 29 விழுக்காட்டைப் பிரான்சிடமிருந்தும், 15 விழுக்காட்டை இஸ்ரேலிடமிருந்தும் வாங்குகிறது.

உள்நாட்டுத் தயாரிப்பில் இந்தியா முன்னேறி வருவதால், கடந்த 2016-2020 காலகட்டத்தை விட தற்போது இந்தியாவின் இறக்குமதி 4 விழுக்காடு குறைந்துள்ளது,

எனினும், நவீன ரக போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுக்காக இந்தியா வெளிநாட்டுச் சந்தைகளையே பெரிதும் நம்பியுள்ளது.

சீனா, பாகிஸ்தான் நாடுகளுடனான பாதுகாப்புப் போட்டியே இந்தியா இத்தகைய பெரும் ஆயுதக் குவிப்பில் ஈடுபட முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் உலக ஆயுத இறக்குமதியாளர்கள் பட்டியலில் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், அதன் 80 விழுக்காடு ஆயுதங்களைச் சீனாவிடமிருந்து வாங்கியுள்ளது.

பிரான்ஸ், அமெரிக்காவுடனான இந்தியாவின் தற்காப்பு உறவு தற்போது பன்மடங்கு வலுவடைந்துள்ளதால், ஒரு காலத்தில் 70 விழுக்காடாக இருந்த இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி தற்போது 40 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்