பசுமை மின் கட்டமைப்பில் உலக நாடுகளை ஒன்றிணைக்க இந்தியா பெருமுயற்சி

2 mins read
8fbcdced-4495-4b11-950a-5abddddaa746
ஐஎஸ்ஏ எனப்படும் அனைத்துலக சூரியசக்திக் கூட்டமைப்பை பத்தாண்டுகளுக்கு முன்பு பிரான்சுடன் இணைந்து இந்தியா ஏற்படுத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உலகின் பல்வேறு கண்டங்களுக்கு இடையே பசுமை மின் திறனைத் தொடர்புப்படுத்த இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்காக, அது புதிய எரிசக்தித் திட்டம் ஒன்றைத் தீட்டி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

பசுமை மின் ஆற்றலை தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைப்பது அந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூருக்கு சூரிய மின் சக்தியைக் கொண்டு செல்ல கடலுக்கடியில் கம்பிவடம் அமைப்பதும் ஒரு யோசனை. அதுபற்றிய ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேபோன்றதொரு நடவடிக்கையை ஐக்கிய அரபு சிற்றரசுகள் மற்றும் சவூதி அரேபியாவுடனும் இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இவற்றுடன், இலங்கை, நேப்பாளம், பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன் தனது எரிசக்தி ஒத்துழைப்பை இன்னும் அதிகமாக்குவதற்கான சாத்தியங்களையும் இந்தியா ஆராய்கிறது.

விரிவான தெற்காசிய மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க இந்த நாடுகளை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வர இந்தியா விரும்புகிறது.

“இவை யாவும் தொலைநோக்குத் திட்டங்கள். அடுத்த 10 முதல் 20 ஆண்டு காலத்தில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் கிழக்காசியா பசுமை மின்சாரத்துக்கான தொடர்பை ஏற்படுத்தலாம்.

“ஆனால், அத்தகைய தொடர்பு இந்தியா வழியாகவே நடைபெறக்கூடும்,” என்று தெரிவித்தார் ஐஎஸ்ஏ எனப்படும் அனைத்துலக சூரியசக்திக் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் ஆஷிஷ் கன்னா.

“இந்தியா ஏற்கெனவே பூட்டான், பங்ளாதேஷ், நேப்பாளம் ஆகிய நாடுகளுடன் (மின்சார) தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளது. அவற்றுடன் பேரளவிலான மின்சார வர்த்தகம் நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.

பல்வேறு அரசாங்கங்களை இணைக்கும் ஐஎஸ்ஏ எனப்படும் அந்தக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு இந்தியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கப்பட்டது.

‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் கட்டமைப்பு’ என்னும் முன்னெடுப்பு வாயிலாக உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு, ஆசியா தொடங்கி ஐரோப்பா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா என்று பரந்து விரிந்த வெவ்வேறு வட்டார மின்சாரக் கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்டது.

நீண்ட தொலைவுக்கு எரிசக்தியைக் கொண்டு செல்வது பற்றியும் அவற்றை வர்த்தகம் செய்வது பற்றியும் நாடுகள் ஆலோசித்து வரும் வேளையில், இந்தியா அதில் முன்னிலை வகிக்க ஆவலாக உள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கட்டுரை விவரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்