புதுடெல்லி: இந்தியா, கடன் வழங்கும் பலதரப்பினரிடமிருந்து கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர் (3.23 பில்லியன் வெள்ளி) நிதியுதவி பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடப்பில் இருக்கும் நிதி விநியோக முறைகளின் வாயிலாக நிதி திரட்ட இந்தியா முயற்சி செய்துவருகிறது. மேற்கு ஆசியப் பூசல் காரணமாக இந்தியாவால் கூடுதலாகச் செலவு செய்ய முடியாமல் போனது இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் டாலரும் ஆசிய மேம்பாட்டு வங்கியிடமிருந்து ஒரு பில்லியன் டாலரும் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அடுத்த இரு மாதங்களில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவி
குறிப்பாக நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய பணிகளுக்காக இந்தியா இந்த நிதியுதவியை நாடுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ரகசியமான விவகாரங்களைப் பற்றி பேசுவதால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
ஆண்டுதோறும் எட்டிலிருந்து 10 பில்லியன் டாலர் நிதியுதவி பெற வகைசெய்யும் ஐந்தாண்டு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இந்தியாவும் உலக வங்கிக் குழுமம் அறிவித்திருந்தன. இப்போது பேசப்பட்டுவரும் நிதியுதவி அதில் அங்கம் வகிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வளர்ச்சிக்கு மெருகூட்டவும் வகைசெய்யும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கப்படக்கூடும்; அதையொட்டி இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக உலக வங்கி அறிக்கை மூலம் கூறியது. கடன் தொகை குறித்து அது தகவல் அளிக்கவில்லை.
இதுகுறித்து கருத்து கேட்டதற்கு ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்திய நிதி அமைச்சும் பதிலளிக்கவில்லை.
போரால் பாதிப்பு
ஈரான் போரால் எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்தியா சலுகைகளை வழங்குவதில் அதிகம் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா, தான் பயன்படுத்தும் 80 விழுக்காட்டு கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. எரிசக்தி விலை அதிகரிப்பால் எரிபொருள், உரம் ஆகியவற்றுக்கான சலுகைகளை அரசாங்கம் உயர்த்தவேண்டியிருந்தது.
அதனால் இந்தியாவால் பெரிய திட்டங்களுக்கு செலவு செய்யமுடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

