புதுடெல்லி: பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா தாயகம் திரும்புவதற்கு இந்தியா இரு நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆகஸ்ட்டில் நாட்டைவிட்டுத் தப்பியோடிய திருவாட்டி ஹசினா புதுடெல்லியில் தஞ்சமடைந்துள்ளார்.
அவர் ராணுவ விமானத்தில் இந்தியா வந்ததுபோலவே, பங்ளாதேஷ் ராணுவம் விமானத்தை அனுப்பி அவரை அழைத்துச் செல்ல வேண்டும் என இந்தியா விரும்புவதாக ‘பிபிசி பங்ளா’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை கிளர்ச்சியின்போது ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கிய வழக்கில் திருவாட்டி ஹசினாவிற்கு பங்ளாதேஷ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் புதிய விசாரணையை எதிர்கொள்ளவும் வாய்ப்பு அளிக்க பங்ளாதேஷ் அரசாங்கம் உத்தரவாதம் தரவேண்டும் என்பது் இந்தியாவின் இரண்டாவது நிபந்தனையாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாண்டு டிசம்பரில் தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் திருவாட்டி ஹசினா ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் கூறியுள்ளார். ஆனால், அது எந்தத் தேதியில் என்பதை அவர் அறிவிக்கவில்லை.
அதற்காக அவர் புதிய கடப்பிதழ் கோரித் தாக்கல்செய்த விண்ணப்பத்தை பங்ளாதேஷ் அரசாங்கம் நிராகரித்தது. குற்றவாளியான அவரை நாடுகடத்த வேண்டுமே தவிர, கடப்பிதழ் வழங்க முடியாது என்று அது தெரிவித்துவிட்டது.
திருவாட்டி ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்து ஈராண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அவர் தொடர்ந்து தங்கியிருப்பது அந்நாட்டிற்கு மிகுந்த நெருக்கடியாக மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அது பங்ளாதேஷுடனான இருதரப்பு உறவைப் பாதித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறையில் தண்டிக்கப்பட்ட முன்னாள் தலைவர்க்கு அடைக்கலம் அளிப்பதாக இந்தியா விமர்சிக்கப்படுகிறது. அவரை மூன்றாவது நாட்டிற்கு அனுப்ப இந்தியா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தாயகம் திரும்பினால் கைது, சிறை அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை நன்கு அறிவேன் எனத் திருவாட்டி ஹசினா கூறியுள்ளார். தமது சொந்தப் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படுவதை நீண்டகாலத்திற்கு முன்பே நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்ளாதேஷில் ராணுவ ஆட்சி நிலவிய 1981ஆம் ஆண்டிலும் 2007ஆம் ஆண்டிலும் தாம் தாயகம் திரும்பியதையும், பலமுறை சிறைவாசத்தையும் கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
