நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் ஆளில்லா வானூர்தி; வெற்றிகரமாகச் சோதித்தது இந்தியா

நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் ஆளில்லா வானூர்தி; வெற்றிகரமாகச் சோதித்தது இந்தியா

படம்: டெக்கான் ஹெரால்ட்

22 Sep 2026 - 6:48 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியத் தற்காப்புத் தொழில்நுட்பத்தில் மற்றொரு வரலாற்றுச் சாதனையாக, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘கல்’ (KAL) என்ற நீண்டதூர ஒருவழித் தாக்குதல் ஆளில்லா வானூர்தியை (டிரோன்) அந்நாடு வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் களப் பயிற்சித் தளத்தில் அச்சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டா பகுதியில் இயங்கும் ‘ஐஜி டிஃபென்ஸ்’ என்ற நிறுவனம், இந்த நவீன ஆளில்லா வானூர்தியை முழுமையாக உருவாக்கியுள்ளது.

அதிகபட்சமாக 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ‘கல்’ ஆளில்லா வானூர்தி, தொடர்ந்து ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை வானில் பறக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும், கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட இந்த ஆளில்லா வானூர்தி, 50 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் ரேடார்கள், வான் பாதுகாப்பு மண்டலங்களைத் தாமே கண்டறிந்து அதன் இலக்குகளைத் தாக்கி அழிக்கும்.

ரஷ்யா, உக்ரேன் போர், மத்திய கிழக்கு மோதல்களில் ஈரான் தயாரிப்பான ‘ஷாஹேத்-136’ போன்ற குறைந்த செலவிலான நீண்டதூர தாக்குதல் ஆளில்லா வானூர்திகள் போரின் போக்கையே மாற்றியமைத்துள்ளன.

அந்த வகையில், இந்திய எல்லைப் பாதுகாப்புக்கும் எதிரிநாடுகளின் முக்கியமான கட்டமைப்பு, ரேடார், வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தகர்க்கவும் இந்த ‘கல்’ ஆளில்லா வானூர்தி முக்கியப் பங்காற்றும் என ஐஜிடி டிஃபென்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி போதிசத்வா சங்கப்பிரியா தெரிவித்துள்ளார்.

நவீன போர்க்களத்தில் நீண்டதூரத் தாக்குதல்களை ஆளில்லா வானூர்திகள் மூலம் நடத்துவது முக்கியமான உத்தியாக மாறியுள்ளது என்றும் இந்திய தற்காப்புத் துறையின் சுயசார்பு பயணத்தில் இந்தச் சோதனை ஒரு மிகப்பெரிய மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆளில்லா வானூர்தி செயற்கை நுண்ணறிவு சார்ந்த ‘கிரிட் ஃபைட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ மூலம் இயங்கும் வசதி கொண்டது.

இந்திய வான்படையின் ‘டிரோனத்தான் 2026’ நிகழ்வைத் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ள இச்சோதனை, இந்திய ராணுவத்தின் நவீன தாக்குதல் திறனைப் பலமடங்கு உயர்த்தி உள்ளதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
ட்ரோன்ஆளில்லா வானூர்திதற்காப்புதொழில்நுட்பம்சாதனைநொய்டா