இந்தியா: பங்ளாதேஷ் துணைத் தூதரகக் கதவை உடைத்து நுழைந்த எழுவர் கைது

இந்தியா: பங்ளாதேஷ் துணைத் தூதரகக் கதவை உடைத்து நுழைந்த எழுவர் கைது

2 mins read
d75b4b3f-bcc8-41c2-b6a6-0a30a6ea8946
படம்: - பிக்சாபே
multi-img1 of 2

கௌஹாத்தி: இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா மாநிலக் காவல்துறையினர், இந்துக்கள் குழுவைச் சேர்ந்த ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

பங்ளாதேஷ் துணைத் தூதரகக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, சேதப்படுத்தியதாக அந்த ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) கூறினார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பங்ளாதேஷ் வலியுறுத்திய சில மணி நேரங்களில் எழுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்தோர் துணைத் தூதரகத்தின் முக்கிய வாயிலை உடைத்து, கட்டடத்தைச் சேதப்படுத்தியதாகவும் தங்கள் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் பங்ளாதேஷ் கூறியது.

கைது செய்யப்பட்டோர் இந்து சங்கர்ஷா சமிதி எனும் அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள்.

இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறும் அந்த அமைப்பு, கடந்த வாரம் பங்ளாதேஷில் இந்து சமயத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.

4,000 பேர் அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர். அவர்களில், துணைத் தூதரகக் கதவை உடைத்து நுழைந்தோரிடம் காவல்துறை விசாரணை நடத்துகிறது.

துணைத் தூதரகப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் காவல்துறை அதிகாரிகள் நால்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.

இந்திய வெளியுறவு அமைச்சு, துணைத் தூதரகம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்துத் திங்கட்கிழமை விடுத்த அறிக்கையில் இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்று கூறியுள்ளது.

எந்தச் சூழ்நிலையிலும் அரசதந்திர, துணைத் தூதரகச் சொத்துகளைக் குறிவைத்துத் தாக்கக்கூடாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்