தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை வெகுவாகக் குறைத்துவரும் இந்தியா: டிரம்ப்

1 mins read
d028501d-7d1e-4f5b-bf1a-b2e4f3f759a8
தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அப்போது, ரஷ்ய - உக்ரேன் போரை நிறுத்த விரும்புவதாகவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதாகவும் மோடி தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, மோடியுடன் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து அவர் தெரிவித்தார்.

“இரு நாடுகளுக்கு இடையே சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம். நான் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடினேன். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. ரஷ்யா - உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அவரும் விரும்புகிறார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அவர்கள் வெகுவாகக் குறைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து அதைக் குறைத்து வருகின்றனர்,” என டிரம்ப் கூறினார்.

இதற்கிடையே, அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசியதை மோடி உறுதிசெய்துள்ளார்.

அதுகுறித்து ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ”தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இந்தத் திருநாளில், இரு பெரும் மக்களாட்சி நாடுகளும் உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்து, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக நிற்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியப் பிரதமரின் பதிவில் ரஷ்ய எண்ணெய், அமெரிக்க கூடுதல் வரி விதிப்பு, ஹெச்1வி விசா கட்டண உயர்வு உள்ளிட்டவை குறித்து பேசியதாக எந்தத் தகவலும் இல்லை.

குறிப்புச் சொற்கள்