தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவை பிப்ரவரி 16ல் மீண்டும் தொடங்கலாம்

2 mins read
d1284102-7ada-43d2-879f-f0154d83e733
நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவை. - கோப்புப் படம்: இந்து

திருச்சி: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வழங்கப்படும் பயணிகள் படகுச் சேவை வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) மீண்டும் தொடங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவைக்கு இதுவரை வானிலை நிலவரம் இடையூறாக இருந்து வந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் வீசும் பலத்த காற்று, சீராக வீசாத பருவக்காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவையைச் சீராக இயங்கவிடாமல் செய்வதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவை, 17 மாதங்களுக்கு முன்பு அதிக கொண்டாட்டத்துடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டுப் போரால் அச்சேவை 41 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கூட்டு முயற்சியில் மிகவும் பழைமைவாய்ந்த இந்தப் பயணச் சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவை அதிகாரபூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு வானிலை காரணமாக குறைந்தது நான்கு முறை சேவை நிறுத்தப்பட்டது.

வியாழக்கிழமை (பிப்ரவரி 13) பயணிகள் படகுச் சேவையை மீண்டும் தொடங்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவை வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்தப் படகுச் சேவையை வழங்கும் ‘சுபம் ஃபெரி சர்வீசஸ்’ படகு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வானிலை நிலவரம் உகந்த வகையில் அமைவதைப் பொறுத்து சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியக் கப்பல்துறைக் குழுமத்தின் (SCI) சார்பில் ‘சுபம் ஃபெரி சர்வீசஸ்’ இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவையை வழங்குகிறது.

படகுச் சேவை தொடங்குவதற்கு முதல் நாள் இணையத்தில் பயணச்சீட்டுகளை வாங்கலாம். தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் படகு இயக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்