புதுடெல்லி: உணவில் உப்பைக் குறைப்பதற்கான இயக்கம் ஒன்றை இந்திய மருத்துவ ஆய்வு மன்றமும் நோய்த்தொற்றுக்கான தேசிய ஆய்வு நிறுவனமும் தோற்றுவித்துள்ளது.
இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் சாப்பாட்டிலுள்ள உப்பின் அளவு மிதமிஞ்சியிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உட்கொள்ளப்படும் அன்றாட சராசரி உப்பின் அளவு, நகரப் பகுதிகளில் நாளுக்கு கிட்டத்தட்ட 9.2 கிராம் என்றும் கிராமப்பகுதிகளில் நாளுக்கு ஏறத்தாழ 5.6 கிராம் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அதிக அளவில் உப்பு சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய், சிறுநீரகப் பிரச்சினை ஆகியவை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வை வழிநடத்திய டாக்டர் ஷரன் முரளி எச்சரித்தார்.
எல்எஸ்எஸ் எனப்படும் குறைந்த சோடியம் வேதிப்பொருள் கொண்ட உப்பு, ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
அனைவரும் உணவிலுள்ள உப்பைப் படிப்படியாகக் குறைப்பதற்கு ‘பிஞ்ச்ஃபோர் அசேஞ்’ (PinchForAChange) என்ற இயக்கம் ஒன்று சமூக ஊடகங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
வரைகலையைப் பயன்படுத்தி தகவல்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின்வழி அளவோடு உப்பை உட்கொள்ள இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.