புதுடெல்லி: அனைத்து அமர்வுகளிலும் இடம்பெறும் வழக்கமான விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்புவதை இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) சோதித்துப் பார்த்தது.
உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் வழியாக அல்லாது, அதன் செயலி வழியாக விசாரணைகள் ஒளிபரப்பப்பட்டன.
அரசியலமைப்பு சார்ந்த, பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகள் மட்டுமே இதுவரை நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வந்தன.
அரசியலமைப்பு சார்ந்த வழக்கு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட முதல் நாளில், அவற்றைத் தோராயமாக 800,000 பேர் பார்த்ததாகக் கூறப்பட்டது.
நீதித்துறையும் தொழில்நுட்பத்தைத் தழுவ வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பம் சார்ந்த பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நீதித்துறை வெளிப்படையாகச் செயல்பட வேண்டும் என்பதும் எளிய மனிதரும் நீதிமன்றச் செயல்பாடுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுமே நேரலை ஒளிபரப்பின் நோக்கம் எனக் கூறப்பட்டது.