புதுடெல்லி: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு அடுத்து, இந்திய ஆடை ஏற்றுமதித் துறையின் கண்ணோட்டத்தை ‘ஐசிஆர்ஏ’ தரநிலைப்படுத்துதல் நிறுவனம், சீரான நிலையில் இருந்து ‘எதிர்மறை’ நிலைக்கு மாற்றியுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியை மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் நிதியாண்டில் வருவாய் குறைய வாய்ப்புள்ளது.
குறைந்த ஏற்றுமதி மற்றும் விலை நிர்ணயம் மீதான அழுத்தம், 2026 நிதியாண்டுக்கான தொழில்துறை செயல்பாட்டு லாப வரம்பை 200-300 அடிப்படைப் புள்ளிகள் சுருக்கும் என்று ‘ஐசிஆர்ஏ’ திங்களன்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்கச் சந்தையில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் அது கூறியுள்ளது.
இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் பிற இடங்களுக்கு விநியோகங்களை மாற்றுதலும் இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளன. ஆனால், அமெரிக்க வரிகள் தொடர்ந்தால், 2026 நிதியாண்டில் ஆடை ஏற்றுமதியாளர்களின் வருவாய் 6-9 விழுக்காடு குறையக்கூடும் என்று ‘ஐசிஆர்ஏ’ அறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்க ஆடை இறக்குமதி சந்தையில் இந்தியா தற்போது 6 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்கள் சந்தை நிலையைத் தக்கவைக்க கடினமாக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிகளின் தாக்கம், தயாரிப்பு வகைகளைப் பொறுத்து மாறுபடும். குறிப்பிட்ட சில ஆடைகளின் உற்பத்திகளுக்குச் சிறப்பான திறன்கள் தேவைப்படுவதால் குறைந்த வரிகளைக் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்கா தனது முன்பதிவுகளை உடனடியாக மாற்றுவதற்குச் சாத்தியம் இருக்காது.

