லிபுலேக் கணவாய் வழியே மீண்டும் தொடங்கியது இந்திய-திபெத் எல்லை வர்த்தகம்

லிபுலேக் கணவாய் வழியே மீண்டும் தொடங்கியது இந்திய-திபெத் எல்லை வர்த்தகம்

2 mins read
bf66da08-be42-4591-ac88-e0271b688466
எல்லைப் பகுதியில் பொருள்களைச் சுமந்து செல்லும் கழுதைகள். - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: இந்தியா-திபெத் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க லிபுலேக் கணவாய் வழியிலான எல்லை வர்த்தகம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாக ஒன்பது வர்த்தகர்கள், எட்டு உதவியாளர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட இந்தியக் குழு, சீனாவின் தக்லாகோட் பகுதிக்கு வணிகப்பொருள்களுடன் சென்றுள்ளது.

நடப்பு வர்த்தகப் பருவத்திற்காக 68 வர்த்தகர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. கடந்த ஜூலை 31 அன்று முதற்கட்டக் குழு புறப்பட்ட போதிலும், சீனத் தரப்பில் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வர்த்தகம் மேற்கொள்ளாமல் திரும்ப நேரிட்டது.

தற்போது 38 நாள்களுக்குப் பிறகு சீன அரசின் அனுமதி கிடைத்ததை அடுத்து, இரண்டாம் கட்டக் குழு வெற்றிகரமாக எல்லையைக் கடந்துள்ளது. ஏறக்குறைய 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதிப் பொருள்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியச் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இந்த எல்லைப் பாதை, 1962 இந்திய-சீனப் போருக்குப் பிறகு மூடப்பட்டது. பின்னர் 1992ல் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த வர்த்தகம், 2019ல் பரவிய ‘கொவிட்-19’ பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது.

நறுமணப் பொருள்கள், தேயிலை, வெல்லம், சர்க்கரை மிட்டாய், அழகுசாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இந்தியா, கம்பளி, சவுரி முடி, ஆடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது.

இந்த எல்லை வர்த்தகத்தின் மறுதொடக்கமானது, தார்ச்சுலா, அதனைச் சுற்றியுள்ள எல்லைக் கிராமங்களில் வசிக்கும் வர்த்தகர்கள், சுமை தூக்குபவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஎல்லைஉத்தராகண்ட்வர்த்தகம்ஏற்றுமதிஇறக்குமதி