புதுடெல்லி: அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு நடவடிக்கையை அடுத்து, இந்தியா தனது இறக்குமதிகள் தொடர்பான கண்காணிப்பைப் தீவிரப்படுத்தி வருகிறது.
முக்கியமாக, சீனப் பொருள்களின் இறக்குமதி மீது மத்திய அரசின் கண்காணிப்பு கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான உத்தியை வகுக்க மத்திய அரசின் வர்த்தக செயலாளர் தனது தலைமையில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன இறக்குமதிகள் மீதான வரியை அமெரிக்கா 54% ஆக உயர்த்தி உள்ளது. இதனால் சீனா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், தன் ஏற்றுமதிகளை வேறு நாடுகளுக்கு திருப்பிவிட அந்நாடு முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதாதவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா கவலை அடைந்துள்ளதுடன், இந்தியாவில் சீனப் பொருள் குவிப்புக்கு வழி வகுக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
மத்திய வர்த்தக அமைச்சு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் சீனாவில் இருந்து 8.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இது முந்திய ஆண்டை விட 10.40% அதிகமாகும்.
“இதற்கு நேர்மாறாக, சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 15.70% குறைந்து 1.09 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியாவில், சீனப் பொருள் குவிப்பைத் தடுக்க வலுவான தடுப்பு முறை இருப்பதை உறுதி செய்ய வர்த்தகத்துறை முயன்று வருவதாக மத்திய வர்த்தக தீர்வுகள் இயக்குநரகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
அது தொடர்பாகத்தான் தற்போது வர்த்தக செயலர் ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.