பங்ளாதேஷ் குறித்து இந்தியா-பிரிட்டன் கலந்துரையாடல்

2 mins read
340dc688-ff09-4360-aa73-e12ccee56898
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுடெல்லி: பங்ளாதேஷின் அரசியல் நிலவரம் குறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேம்மியும் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று கலந்துரையாடினர்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் அமைச்சர் லேம்மி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

பங்ளாதேஷின் ஆக அண்மைய அரசியல் நிலவரங்களைக் கண்காணிக்க இந்தியாவுடனும் சில தெற்காசிய நாடுகளுடனும் தொடர்பில் இருக்கப்போவதாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா அடுத்து எந்த நாட்டுக்குச் செல்வார் எனத் தெரியவில்லை.

இதுதொடர்பான மர்மம் நீடிக்கிறது.

ஷேக் ஹசினாவுக்குப் பிரிட்டன் அல்லது வேறு நாடுகள் அடைக்கலம் தருவது குறித்து பிரிட்டனுடன் கலந்துரையாடப்பட்டதா என்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிடவில்லை.

ஷேக் ஹசினாவின் பயணத் திட்டங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.

அதுகுறித்து முடிவெடுப்பது அவரது உரிமை என்று அது தெரிவித்தது.

“இந்தியாவுக்கு வர மிகவும் குறுகிய காலகட்டத்தில் ஷேக் ஹசினாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பங்ளாதேஷில் அரசியல் நிலவரம் மாறிக்கொண்டிருக்கிறது. அதுகுறித்து தற்போது கருத்துரைப்பது முறையாகாது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் தெரிவித்தார்.

ஷேக் ஹசினா இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு இன்னும் அதிகாரபூர்வமாக விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்குச் செல்ல அவர் விரும்புவதாக நம்பப்படுகிறது.

ஆனால் பிரிட்டனிடம் அடைக்கலம் நாட விரும்புவோர் அங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். வேறொரு நாட்டிலிருந்துகொண்டு விண்ணப்பம் செய்ய முடியாது.

குறிப்புச் சொற்கள்