தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: வேளாண், கடல்துறை ஏற்றுமதிகளுக்குச் சிறப்பான எதிர்காலம்

2 mins read
4dc8f20d-dfea-4b4a-a878-b8b55281e408
இந்தியா - இங்கிலாந்து இடையே விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானபோது பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கைகுலுக்கினர். உடன் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் (வலது). - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: 95 விழுக்காடு இந்திய வேளாண் பொருள்களும், 99 விழுக்காடு இந்திய கடல்சார் உணவுப் பொருள்களும் வரியின்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையே விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் இந்தியாவுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து பியூஷ் கோயல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 99 விழுக்காடு வரி இல்லாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஒப்பந்தம் உழைப்பு மிகுந்த இந்தியத் துறைகளுக்குக் கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர் மதிப்பிலான வாய்ப்புகளை வழங்குகிறது,” என்றார் திரு பியூஷ் கோயல்.

ஆடை, தோல், காலணிகள், நகைகள், பொம்மைகள், கடல் பொருள்கள் உள்ளிட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இது வளர்ச்சி தரும் என்றார் அவர்.

கிராமப்புறத் தறிகள் முதல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வரையிலான தொழில்களுக்கு நிதி உதவி கிடைப்பதும் இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழங்கும்.

விவசாயிகளுக்கு வெற்றி

இங்கிலாந்துடனான இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும் என்றார் பியூஷ் கோயல்.

“கிட்டத்தட்ட 95 விழுக்காடு வேளாண் பொருள்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்வதை இது உறுதி செய்கிறது.

“அதேபோல், மீனவர்கள் 99 விழுக்காடு கடல்சார் உணவுப் பொருள்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும் என்பதால், அவர்களும் இனி அதிக லாபத்தைப் பெறுவார்கள். இதனால் அவர்களின் வருமானம் அதிகரிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பம், சேவைகள் மற்றும் கல்வி ஆகியவற்றில் இங்கிலாந்தின் உயர் மதிப்புள்ள சந்தைகளை இனி இந்தியர்கள் எளிதாக அணுகிப் பயனடைய முடியும்.

அதிக வேலைவாய்ப்பு உருவாக்கத்தை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது, இதன்மூலம் சமூகங்களை மேம்படுத்துகிறது என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.

குறிப்புச் சொற்கள்