தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிக்கும்படி ஆசியானுக்கு வலியுறுத்து

2 mins read
513ff7e0-a4f1-4086-88d5-b599bc14daf0
புதுடெல்லியில் உள்ள தம் அலுவலகத்தில் அண்மையில் ஆசியான் செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய வணிக, தொழில் அமைச்சின் வணிகத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் (நடுவில்). - படம்: முஹம்மது ஃபைரோஸ்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையேயான வர்த்தக உறவு குறித்த சமநிலை, நீண்டகால பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அது ஒருதரப்புக்கு மட்டும் சாதகமாக இருந்துவிடக்கூடாது என்றும் இந்திய வணிக, தொழில் அமைச்சின் வணிகத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார்.

எனவே, இந்தியாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆசியான் நாடுகள் ஆராய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள தம் அலுவலகத்தில் அண்மையில் ஆசியான் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையே நிலவும் வர்த்தக சமநிலையின்மையை அவர் கோடிட்டுக் காட்டினார்.

ஆசியான் நாடுகளிடமிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மொத்த மதிப்பு US$80 பில்லியன், அல்லது அதன் மொத்த இறக்குமதிகளில் இது 11 விழுக்காடு என்பதை அவர் சுட்டினார். ஒப்புநோக்க, ஆசியான் நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதிகள் US$40 பில்லியன் மதிப்பில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக இருப்பதையும் அவர் சுட்டினார். இது, ஆசியானின் மொத்த இறக்குமதிகளில் வெறும் 2.2 விழுக்காடு.

“இந்தியாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆசியான் நாடுகள் கண்டறிந்தால், இது இன்னும் பேரளவிலான சந்தைக்கு வித்திடும். அதன்படி, இந்தியாவும் எதிர்காலத்தில் ஆசியானிடமிருந்து கூடுதலாக வாங்க முடியும்,” என்றார் திரு அகர்வால்.

ஆசியானும் இந்தியாவும் ஒரே மாதிரியான மக்கள்தொகையியலை (demographics) கொண்டிருப்பதாகச் சொன்ன அவர், அந்தந்த நாடுகளின் இளம் மக்கள்தொகை பரஸ்பர கூட்டு முயற்சிக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினார்.

“ஆசியான் உறுப்பு நாடுகள் ஒப்பீட்டளவில் இளம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. நாம் ஒருவருக்கொருவர் நிறைய வேற்றுமைகளை ஒன்றிணைத்து நம்மை பலமாக்கிக்கொள்ளலாம்,” என்றார் அவர்.

ஆசியானிடமிருந்து இந்தியாவின் இறக்குமதிகள், அதன் ஏற்றுமதிகளை விஞ்சிவிட்டதால், வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்து வருகிறது.

தற்போது ஆசியான் நாடுகளிடமிருந்து இந்தியாவின் இறக்குமதிகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றில் நிலக்கரியும் செம்பனை எண்ணெய்யும் அடங்குகின்றன. அதேவேளையில், இந்தியாவின் ஏற்றுமதிகளில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள், வணிக வாகனங்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள், வேளாண் பொருள்கள், பொறியியல் பொருள்கள் உள்ளிட்டவை அடங்கும்.

ஆசியான் உடனான இந்தியாவின் வர்த்தகம் பெரும்பாலும் இந்தோனீசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்னாமை மையமாகக் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்