புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்சும் தொலைபேசிவழி ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது நடைபெற்றுவரும் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளின் தொடர் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மனநிறைவு தெரிவித்தனர்.
இருவரது பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம், பாதுகாப்பு, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள், எரிசக்தி பாதுகாப்பு, முக்கிய உலோகங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் வட்டார, அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய நிலவரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அமெரிக்கத் துணை அதிபரிடம் இருந்து தமக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததைப் பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
முக்கியத் துறைகளில் இரு நாடுகளின் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் ரஷ்யாமீது பொருளியல் தடைகளை விதிக்கும் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்தியப் பிரதமரும் அமெரிக்கத் துணை அதிபரும் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மசோதாவானது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்மீது நூறு விழுக்காடு வரை வரிவிதிக்க வழிவகுக்கும்.
இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளன.
அண்மைய தொலைபேசி உரையாடல் இருதரப்பு உறவைச் சீராக வைத்திருக்க உதவும் என அனைத்துலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


