இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்: மார்கோ ரூபியோ உறுதி

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்: மார்கோ ரூபியோ உறுதி

படம்: எக்ஸ் தளம்/மார்கோ ரூபியோ, இந்தியா

21 Oct 2026 - 2:41 pm

2 mins read

மும்பை: இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20), மும்பையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்த மார்கோ ரூபியோ, வர்த்தகம், பாதுகாப்பு, ஆற்றல், தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து விவரித்த திரு ரூபியோ, இருதரப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் சில முக்கியமான அம்சங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்றும் வெகுவிரைவில் இருநாட்டுத் தலைவர்களும் அதில் கையெழுத்திடும் வகையில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஆற்றல், பாதுகாப்புத் துறை:

எரிபொருள் சுத்திகரிப்பில் இந்தியா ஒரு ‘வல்லரசு’ என்று புகழாரம் சூட்டிய திரு ரூபியோ, அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியாவின் விநியோகச் சங்கிலியைப் பன்முகப்படுத்த முடியும் என்றார்.

மேலும், வெனிசுலா கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் திறனை இந்தியா அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், புதன்கிழமை (அக்டோபர் 21) அன்று ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் சென்றார்.

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு:

பேச்சுவார்த்தைக்கு முன்பாக, 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாகத் தாஜ் தங்குவிடுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் ரூபியோ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் ஜெய்சங்கரும் சுட்டிக்காட்டினார்.

அண்மைக்காலமாக விசா கட்டண உயர்வு, வர்த்தகக் கெடுபிடிகளால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் சில தேக்கநிலைகள் நிலவி வந்தன.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியான வேகத்தை திரு ரூபியோவின் பயணம் பிரதிபலிப்பதாகவும் 21ஆம் நூற்றாண்டுக்காக இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இரு தரப்பினரும் அளிக்கும் முக்கியத்துவத்தை இது அடிகோடிட்டுக் காட்டுவதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மும்பையில் திரு ஜெய்சங்கருடன் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்ததோடு, அமெரிக்க-இந்திய உத்திபூர்வ பங்காளித்துவத்தை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியதாக திரு ரூபியோ கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்