புதுடெல்லி: எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒடுக்கும் முயற்சியாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 2வது போதைப்பொருள் கொள்கை நிர்வாக செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
இதில் இரு நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு, கொள்கை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் (என்சிபி) நவம்பர் 2, 3 தேதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் செயற்கை போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல், மருந்து விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாத்தல், எல்லை தாண்டிய சட்டவிரோத போதைப்பொருள் நிதிப் பரிவர்த்தனைகளைத் துண்டித்தல் ஆகியவற்றிற்கான ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாஷிங்டனில் ஜனவரி 2026ல் நடைபெற்ற தொடக்கக் கூட்டத்தின் உத்வேகத்தைத் தொடர்ந்து உளவுத் தகவல்களைப் பகிர்தல், ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள், போதைப்பொருளுக்குப் பயன்படும் மூலப்பொருள்களைக் கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் தேவைகளைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு தீவிர முன்னுரிமைகள் வழங்கவும் மாறிவரும் கடத்தல் பாணிகளை மதிப்பீடு செய்யவும் இந்த இரண்டு நாள் கூட்டத்தை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொண்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலில் இந்த விவரங்கள் தெரிய வருகின்றன.
இந்தியக் குழுவிற்கு என்சிபி தலைமை இயக்குநர் அனுராக் கார்க் தலைமை தாங்கினார். அமெரிக்கத் தரப்பிற்கு தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுக் கொள்கை அலுவலகத்தின் தற்காலிக துணை இயக்குநர் டெப்பி செகுயின் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய என்சிபி தலைமை இயக்குநர் கார்க், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட ‘இந்திய தொலைநோக்கு வரைபடம் 2026–2029’ஐ சுட்டிக்காட்டினார்.
தெருவோரங்களில் செயல்படும் சிறிய அளவிலான நபர்களை மட்டும் குறிவைக்காமல், இதன் பின்ணியில் செயல்படும் முக்கிய நபர்கள், நிதியளிப்பவர்கள், வேதிப்பொருள் விநியோகிப்பாளர்கள், போக்குவரத்து வசதிகளைச் செய்து தருபவர்களைக் குறிவைத்து ஒரு வலுவான, கட்டமைப்பை மையமாகக் கொண்ட அமலாக்க முறைக்கு இந்தியா மாறியுள்ளதாக கார்க் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் பொதுவான அச்சுறுத்தலை சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் தலைமை போதைப்பொருள் தடுப்பு அதிகாரியான சாரா கார்ட்டர், அனைத்துலக தளவாட நிறுவனங்களைப் போல அதிநவீனமாகச் செயல்பட்டு வரும் எல்லை தாண்டிய கடத்தல் கும்பல்களை முடக்குவதற்கு இருதரப்பு ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
