புதுடெல்லி: இந்தியாவின் எதிர்கால வர்த்தக வளர்ச்சியானது, உற்பத்தித் துறையில் மேலும் வலுப்பெறும் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு இந்திய உற்பத்தி துறையில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிப்பதே முக்கியக் காரணமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் இந்தியா ஆறு விழுக்காடு பங்களிப்புடன், மூன்றாவது இடத்தில் இருக்கும் என்று டிஎச்எல், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெறும் என்றும் சீனா 12% உடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 10 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கும் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் அதன் கூட்டு வருடாந்தர வர்த்தக அளவு வளர்ச்சி விகிதம் 5.2%ல் இருந்து, 7.2%ஆக அதிகரிப்பதால், அது மூன்றாம் இடத்தைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பசுமை வெளி நேரடி முதலீட்டுக்கு உகந்த இடமாக இந்தியா அனைத்துலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கடந்த 2023ஆம் ஆண்டு தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியாவில் இந்த முதலீட்டிற்கான மிக முக்கியமான வணிகச் செயல்பாடாக உற்பத்தித்துறை மாறியுள்ளது என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு அனைத்துலக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 13வது இடமே கிடைத்தது. அச்சமயத்தில் அனைத்துலக வர்த்தக வளர்ச்சியானது, 2 விழுக்காடாக மட்டுமே இருந்த போதும், இந்தியாவின் வளர்ச்சி மட்டும் 5.2 விழுக்காட்டை எட்டிப்பிடித்தது.
இந்தியாவின் இந்த துரிதமான வணிக வளர்ச்சியையும் அதுசார்ந்த பொருளியல் வளர்ச்சியையும் மேற்குறிப்பிட்ட ஆய்வின் முடிவுகள் பிரதிபலிப்பதாக அதை மேற்கொண்ட நிறுவனங்கள் தெரிவித்தன.
வணிகம் சார்ந்த பொருளியல் ரீதியில் இந்தியாவைவிட சீனா முன்னிலையில் இருந்தாலும், கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் சரக்கு வர்த்தகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சீனாவைவிட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
சரக்கு, சேவைத்துறையில் இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்கும் பட்சத்தில், அதன் வளர்ச்சி குறித்த கணிப்புகள் தவறாக அமைய வாய்ப்பில்லை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.