2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம்: இஸ்‌ரோ தலைவர் நம்பிக்கை

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம்: இஸ்‌ரோ தலைவர் நம்பிக்கை

1 mins read
d93dd08b-ea9e-45e4-9abb-f259593cbace
இஸ்ரோ தலைவர் நாராயணன். - படம்: என்டிடிவி

கோவை: எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசிய அவர், விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் ஏவுதல், உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள், மேம்பட்ட விண்வெளிப் பயணங்கள் ஆகிய செயல்பாடுகளின் மூலம் இந்தியா உலக அளவில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட திரு நாராயணன், 2035க்குள் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் 2028ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் கூறினார்.

2047ஆம் ஆண்டுக்குள் முன்னேறிய இந்தியா (விக்சிட் பாரத்) என்ற இலக்கை அடைய மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

“எந்தத் துறையில் படித்தாலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்.

“தற்போது உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது,” என்றும் திரு நாராயணன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்