நியூயார்க்: உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறக்கூடிய போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்று இத்தாலியப் பிரதமர் மெலோனி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவும் இத்தாலியும் அரசதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஐநா பொதுப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இத்தாலியப் பிரதமர் மெலோனியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்க முடியும் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு மறைமுகமாக நிதி அளிப்பதாக இந்தியாவை அமெரிக்கா சாடியுள்ளது.
இத்தகைய சூழலில் இத்தாலியப் பிரதமரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரதமர் மோடியும் இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் தொலைபேசியில் உரையாடியபோது, அனைத்துலக அளவிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்ததாகக் கூறப்பட்டது.
குறிப்பாக உக்ரேனில் அமைதி திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேசினர்.
அப்போது, பேச்சுவார்த்தை, சுமுக தீர்வுக்கான முழு ஆதரவை இந்தியா வழங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
உக்ரேன் விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதில் இருநாடுகளுக்கும் உள்ள ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டதாக பின்னர் தமது எகஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

