புதுடெல்லி: உக்ரேன் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் பல காலமாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர, அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில், சீனாவில் நடந்த ஷாங்காய் மாநாட்டுக்குச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. அங்கு சீன, ரஷ்ய அதிபர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் அவர் போர் குறித்தும் அமைதி திரும்ப மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் தொலைபேசி வழி ஆலோசனை மேற்கொண்டார். இதனால் மோடி, அதிபர் ஸி, அதிபர் புட்டின் ஆகிய மூவருக்கும் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே, வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 4), உக்ரேன் நிதியமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசியதாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுடனான உறவு குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், அமைதியை ஏற்படுத்த உதவும் அனைத்து செயல்பாடுகளையும் இந்தியா ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்தும் இருதரப்பும் கவனம் செலுத்தியதாகவும், போரை முழுமையாக நிறுத்துவதற்கும் அமைதி முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதில் இந்தியா தனது அதிகாரபூர்வ குரலை ஏழுப்பவும் செயல் அளவில் பங்களிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபைக் கூட்டத்தின்போது இரு அமைச்சர்களும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அரசியல் உரையாடல், உயர் மட்ட பரிமாற்றங்கள், பொருளியல் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், இருதரப்பும் ஆர்வம் கொண்டுள்ள பிற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்த விவாதங்கள் தொடரும் என்று உக்ரேன் நிதியமைச்சர் சிபிஹா கூறினார்.
இதனிடையே ரஷ்யா, உக்ரேன் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மிகவும் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ரஷ்யா, உக்ரேன் இடையே நடக்கும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

