புதுடெல்லி: அனைத்துலக அளவில் மருந்து ஏற்றுமதியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டில் இந்திய மருந்து ஏற்றுமதி 9 விழுக்காட்டிற்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதியில் மருந்து ஏற்றுமதி மொத்தம் 30.47 பில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.4 விழுக்காடு அதிகமாகும்.
மருந்து உற்பத்தியில் இந்தியா தற்போது உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறது.
மத்திய அரசின் புதிய கொள்கைகள், மேம்பட்ட உற்பத்தித் திறன்கள் இந்திய மருந்துத் துறையை அனைத்துலக அளவில் நம்பகமானதாக மாற்றியுள்ளன.
இது குறித்து மத்திய வர்த்தகத் துறை செயலர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், “இந்த அபரிமிதமான வளர்ச்சி உலக சந்தையில் இந்திய மருந்துகளுக்கான தேவையை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் வலுவான உற்பத்தித் தளமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அசுர வளர்ச்சியின் மூலம் இந்தியா, ‘உலகின் மருந்தகம்’ என்ற தனது நிலையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது.

