புதுடெல்லி: உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்த டாப் 10 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் உக்ரேன் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தெரிவித்தது. இதற்கான தரவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உக்ரேனும் இந்தியாவும் பெருமளவு ஆயுதக் கொள்முதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
உக்ரேன், ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. எனவே உக்ரேன் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இக்காலகட்டத்தில் மட்டும் அந்நாட்டின் ஆயுத இறக்குமதி 100 மடங்கு அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இறக்குமதியான ஆயுதங்களில் 36% ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. மேலும் 28% ஆயுதங்களை பிரான்ஸ் வழங்கி உள்ளது.
கடந்த 1990-94 காலகட்டத்துக்குப் பிறகு முதல் முறையாக சீனா இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிறுவனத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் பாகிஸ்தான் 2015-19, 2020-24 என இரு காலகட்டங்களில் 61% ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் 81% ஆயுதங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகியவை பட்டியலில் முன்னணியில் உள்ளன.
2020-24 காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து 33 நாடுகள் ஆயுதங்களை வாங்கிய நிலையில், அவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு (38%) இந்தியாவால் வாங்கப்பட்டது. சீனா (17%), கஸகஸ்தான் (11%) ஆயுதங்களை வாங்கியுள்ளன.
இதேபோல் இக்காலகட்டத்தில் பிரான்ஸ் 64 நாடுகளுக்கு ஆயு[Ϟ]தங்களை விற்றது. அதில் இந்தியாவுக்கு மட்டும் சுமார் 28% ஏற்றுமதி ஆகியுள்ளது.
உக்ரேனுக்கு 35 நாடுகள் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


