தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எவரெஸ்ட் மலையேற்றத்தின்போது உயிரிழந்த இந்தியர், பிலிப்பினோ

1 mins read
4fc006d4-5fea-4665-8c6d-fb360f2ede8f
எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிலிப்பீன்சைச் சேர்ந்த திரு பிலிப் சேன்டியாகோ, மே 14ஆம் தேதி உயிரிழந்தார். - படங்கள்: எமில் சுமங்கில்/ஃபேஸ்புக்

காத்மண்டு: இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் ஈடுபட்ட மலையேறிகளில் இந்தியர் ஒருவரும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டனர்.

மார்ச் முதல் மே மாதம் வரையிலான இந்தப் பருவத்தில் அங்குப் பதிவான முதல் உயிரிழப்புச் சம்பவங்கள் இவை என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 16) கூறினர்.

கடல் மட்டத்திலிருந்து 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை எட்டியபின் கீழே இறங்கி வந்துகொண்டிருந்த 45 வயது இந்தியரான சுப்ரதா கோஷ், வியாழக்கிழமை உயிரிழந்தார்.

‘ஹில்லரி ஸ்டெப்’ எனுமிடத்திலிருந்து கீழே இறங்க அவர் மறுத்துவிட்டதாக மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்யும் நேப்பாள நிறுவனம் தெரிவித்தது. மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எவரெஸ்ட் சிகரத்துக்குச் சற்று கீழே, கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள ‘மரணப் பகுதி’ என்றழைக்கப்படும் வட்டாரத்தில் அமைந்துள்ளது ‘ஹில்லரி ஸ்டெப்’. அங்கு உயிர்வாழத் தேவையான அளவு இயற்கையான உயிர்வாயு (Oxygen) இருக்காது.

அவரது சடலத்தைக் கீழே கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் உடற்கூராய்வுக்குப் பிறகுதான் அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் கூறப்பட்டது.

புதன்கிழமை (மே 14), எவரெஸ்ட்டை நோக்கி ஏறிக்கொண்டிருந்த திரு சேன்டியாகோ மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மிகவும் களைப்பாகக் காணப்பட்ட அவர், நான்காம் முகாமில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

இந்தப் பருவத்தில் 459 பேருக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதியை நேப்பாளம் வழங்கியுள்ளது. இவ்வார நிலவரப்படி கிட்டத்தட்ட 100 மலையேறிகளும் அவர்களின் வழிகாட்டிகளும் சிகரத்தை எட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்