புதுடெல்லி: பாகிஸ்தானில் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியப் பெண்களின் சிந்தூரத்தை அவமதித்தவர்களைப் பழிவாங்குவதற்காக கணவர்களை இழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 12 நாள்கள் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்று அவர் கூறினார்.
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் நடவடிக்கையாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது. பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஊழியர்கள் குறைக்கப்பட்ட நிலையில், அவர்களும் வெளியேற உத்தரவிடப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 29 பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்துடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். பின்னர் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டு, மே 7 தாக்குதல் நடந்தது.
இந்த ராணுவ நடவடிக்கையானது பாகிஸ்தான் நாட்டின் இதயப் பகுதியான பஞ்சாப் மாகாணத்தின் முதன்மை நகரங்களான பவல்பூர் மற்றும் முர்திகேவை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளன. 54 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மீது இந்தியா முதல் முறையாக தாக்குதலை நடத்தி இருக்கிறது.
மே 10 வரை விமானச் சேவைகள் ரத்து
பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் உள்ள பதான்கோட், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், ஜோத்பூர், ஜாம்நகர், சண்டீகர், தில்லி, ராஜ்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
புதன் காலை முதல் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடமேற்கு மண்டலத்தில் இயக்கப்படும் 165க்கும் மேற்பட்ட விமானங்களை வருகின்ற மே சனிக்கிழமை 10 காலை 5.29 மணிவரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற விமான நிறுவனங்களும் தங்களின் விமான சேவையை ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர்ப் பதற்றம் காரணமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியா, பாகிஸ்தானுக்கான சேவையை ரத்து செய்துள்ளன.
குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி புதன்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் நிலவும் சூழல், மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். அதனைத் தொடர்ந்து வியாழனன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் போர்க்கால ஒத்திகை
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை துவங்கியது. சென்னை துறைமுகம் பகுதியில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. போர் சூழலில் செயல்பட வேண்டிய முறைகள் தொடர்பாக சென்னை துறைமுகத்தில் போர்க்கால ஒத்திகை தொடங்கியது. பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து சென்னையில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது.