கொலை வழக்கு: ஓமானுக்கு நாடுகடத்தப்படும் இந்தியர்

1 mins read
இந்திய அரசாங்கத்தின் முடிவை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்
89d73e85-6094-441e-af31-e5938449c720
மாதிரிப்படம்: - பிக்சாபே

புதுடெல்லி: ஓமானியத் தம்பதியரையும் அவர்களுடைய மூன்று குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக இந்தியர் ஒருவர் ஓமானுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.

அவரை நாடுகடத்துவது என்று இந்திய அரசாங்கம் எடுத்த முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த முடிவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

மஜிபுல்லா முகம்மது ஹனீஃப் என்ற அந்த இந்தியர், கடந்த 2019 ஜூலை 31ஆம் தேதி, அந்த ஓமானியத் தம்பதியையும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளையும் திட்டமிட்டுக் கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை ஓமானுக்கு நாடுகடத்துவது என்ற இந்திய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, ஹனீஃப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆயினும், நீதிபதி அமித் பன்சால் தலைமையிலான அமர்வு ஹனீஃபின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

குறைந்தது ஓராண்டுச் சிறைத்தண்டனை அல்லது கடும் தண்டனைக்கு வகைசெய்யும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நாடு கடத்துவது தொடர்பில் இந்தியாவிற்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு இருப்பதை நீதிபதி பன்சால் சுட்டிக்காட்டினார்.

ஹனீஃப் மீதான வழக்கு விசாரணை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும் என்று ஓமானிய அரசாங்கம் உறுதியளித்திருப்பதையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது.

புலனாய்விலும் அதனைத் தொடர்ந்த விசாரணையிலும் ஹனீஃப் பங்கெடுக்க ஏதுவாக, அவருக்குச் சட்டப் பிரதிநிதித்துவமும் உரைபெயர்ப்புச் சேவையும் வழங்கப்படும் என்றும் ஓமானிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்