தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

113 புதிய அரசுப் பள்ளிகளுக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்

1 mins read
87e40f50-6979-4fe9-a4fc-96e9c7705d9a
இந்தியாவின் கேவி பள்ளிகளில் ஒன்று. - படம்: crpfallahabad.kvs.ac.in / இணையம்

புதுடெல்லி: இந்திய அமைச்சரவை, மொத்தம் 113 புதிய அரசுப் பள்ளிகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

நாடெங்கும் சிவில், தற்காப்புத் துறைகளின்கீழ் 85 புதிய கேந்திரிய வித்யாலயப் (கேவி) பள்ளிகளையும் 28 புதிய நவோதய வித்யாலயப் (என்வி) பள்ளிகளையும் அமைக்க அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 6) ஒப்புதல் அளித்தது.

மாணவர்களுக்கான உயர்தர கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகள், போதுமான வசதி இல்லாத இடங்களில் இருக்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது இலக்காகும்.

‘பிஎம் ‌ஸ்ரீ ஸ்கூல்ஸ்’ (PM Shri schools) பள்ளித் திட்டத்தின்வழி தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) செயல்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.

கிட்டத்தட்ட எல்லா கேவி, என்வி பள்ளிகளும் ‘பிஎம் ‌ஸ்ரீ ஸ்கூல்ஸ்’ திட்டத்தின்கீழ் வரும். உள்கட்டமைப்பு, மாணவர் தேர்ச்சி உள்ளிட்ட அம்சங்களின் தொடர்பில் அவை முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக அமைக்கப்படவுள்ள கேவி பள்ளிகள் சுமார் 82,560 மாணவர்களுக்கும் புதிய என்வி பள்ளிகள் கிராமங்களில் உள்ள ஏறத்தாழ 15,680 திறமையான மாணவர்களுக்கும் ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்