பெங்களூர்: சமையலறையில் பயன்படுத்தப்படும் எளிய மசாலாப் பொருள்களைக் கொண்டு பிரம்மாண்டமான கலைப்படைப்பை உருவாக்கி, இந்தியக் கலைஞர் ஒருவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 29 வயதான அமர் காலே என்ற கலைஞர், கர்நாடக மாநிலம் தார்வாடில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கர்நாடகாவின் கலாசாரம், பாரம்பரியம், கட்டடக்கலையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், 175.82 சதுர மீட்டர் (ஏறக்குறைய 1,892.5 சதுர அடி) பரப்பளவில் ‘மிகப்பெரிய மசாலா ஓவிய’த்தை (Largest spice painting) வரைந்துள்ளார். இது ஏறக்குறைய ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவில் மூன்றில் இரண்டு பங்காகும்.
கர்நாடக மாநிலக் கொடியின் மஞ்சள், சிவப்பு நிறங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சுமார் ஆறு கிலோ மஞ்சள் தூள் ஐந்து கிலோ மிளகாய்த்தூளை மட்டுமே பயன்படுத்தி இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் கர்நாடக வரைபடத்தின் எல்லைக்குள் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹம்பி தேர்’ உருவம் அச்சு அசலாக வரையப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹம்பி விட்டலா கோவில் வளாகத்தில் உள்ள கல் தேர், 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் சிற்பக்கலை, பொறியியல் திறனுக்கான சான்றாக அது விளங்கி வருகிறது.
தனது பிரம்மாண்ட படைப்பை முடிக்க அமர் காலேவுக்குப் பத்து மணிநேரம் மட்டுமே தேவைப்பட்டது. மீதமான மசாலாப் பொருள்கள் வீணாகாமல் தானமாக வழங்கப்பட்டன.
பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, கலை மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த 2018ல் வேலையைத் துறந்து முழுநேரக் கலைஞராக மாறிய அமர் காலே, ஏற்கெனவே இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்தவர்.
“எளிய சமையல் பொருள்களைக் கொண்டும்கூட வரலாற்றைப் பேசும் உன்னதமான கலைப்படைப்புகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபிப்பதே எனது நோக்கம்,” என்று கூறியுள்ளார் அமர் காலே.
