ஊடகப் போதையால் இந்தியச் சிறார்கள் சீரழிவு: ஆய்வறிக்கையில் தகவல்

ஊடகப் போதையால் இந்தியச் சிறார்கள் சீரழிவு: ஆய்வறிக்கையில் தகவல்

2 mins read
b86f795b-bf28-42e8-b6d2-d23e44a6169c
இணையவழி பகடிவதை அதிகரித்துவிட்டதாக இந்திய நிதி அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. - படம்: வைப்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் சமூக ஊடகப் போதையால் ஏராளமான சிறார்கள் சீரழிந்து வருவதாக இந்திய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 2026ஆம் ஆண்டுக்கான பொருளியல் ஆய்வறிக்கையை அந்த அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கட்டுப்பாடற்ற மின்னிலக்கப் பயன்பாடு, இந்தியச் சிறார்களின் மனநலம், கல்வித்திறன், சமூக நடத்தையைப் பெரிதும் பாதிப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளியல் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், மாறி வரும் பொருளியல் நிலை குறித்து இந்திய நிதியமைச்சு ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது.

பொருளியல் வளர்ச்சியின் எதிரொலியாக, நாட்டின் குக்கிராமங்களில்கூட இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கட்டுப்பாடற்ற முறையில் இந்த வசதிகள் இளைய தலைமுறையினரைச் சென்றடைகின்றன.

குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இந்தியச் சிறுவர்கள் இடையே சமூக ஊடகப் போதையால் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இணையவழி பகடிவதையும் அதிகரித்துவிட்டதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எனவே சமூக ஊடகங்கள், இணையவழிச் சூதாட்டம், இணையவழி விளையாட்டுச் செயலிகளை பயன்படுத்துவோரின் உண்மையான வயது துல்லியமாக சரிபார்க்கப்படுவதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் எனப் பொருளியல் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திரை நேரத்தைக் குறைக்க பள்ளிகளில் மின்னிலக்க நலன் (டிஜிட்டல் வெல்நெஸ்) குறித்த பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தல், அன்றாட உடல் உழைப்பைக் கட்டாயமாக்குதல், நகர்ப்புற-கிராமப்புறங்களில் இணையவழி அல்லாத இளையோர் மையங்களை அமைத்தல் ஆகிய பரிந்துரைகளும் பொருளியல் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகள் சிறார்களின் இணையப் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்றும் அவற்றை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறார்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அதுதொடர்பான விளம்பரங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஊடகங்களில் தடைவிதிக்க வேண்டும் என்றும் பொருளியல் ஆய்வறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்