புதுடெல்லி: அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே பேரளவில் போதைப்பொருள்களைக் கடத்த முயன்ற ஈரானிய படகை இந்திய கடலோரக் காவல்படை மடக்கிப் பிடித்தது.
இந்த நடவடிக்கையின்போது, அனைத்துலகச் சந்தையில் ஏறக்குறைய 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 526 கிலோ ஹெராயின், மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்தியக் கடலோரக் காவல்படை செப்டம்பர் 25 அன்று அரபிக்கடலில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் கடலில் வலம்வந்த ஈரானியப் படகை விரைந்து சென்று சுற்றி வளைத்தது.
அந்தப் படகில் இருந்த பாகிஸ்தான் கடலோடிகளை அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களுடன் பிடிபட்ட அனைவரும் ஆயுதம் ஏந்திய வீரர்களின் பாதுகாப்புடன் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இணைந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்புகளின் பொருளியல் பின்னணியைத் தகர்ப்பதில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் கடலோரக் காவல்படை தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.
