தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
காப்பி உற்பத்தியில் உலகில் ஏழாவது இடம், நான்கு ஆண்டுகளின் இரட்டிப்பான ஏற்றுமதி

அதிகரித்து வரும் இந்தியக் காப்பியின் தேவை; ஏற்றுமதி US$1.29 பில்லியனை எட்டியது

2 mins read
bf688bbd-1916-4371-9db4-65b83615971c
காப்பி விளைச்சலுக்குப் பெயர் பெற்ற கூர்க் பள்ளத்தாக்கு. நிழல் நிறைந்த காப்பித் தோட்டங்கள், பொருளியலுக்கு உதவுவதுடன், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. - படம்: இணையம்.

புதுடெல்லி: உலகளவில் காப்பி உற்பத்தியில் ஏழாவது இடத்தில் உள்ள இந்தியாவின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.11,165 கோடி) எட்டியுள்ளது. இது 2020-21ஆம் நிதியாண்டின் 719.42 மில்லியன் டாலரைவிட கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

இந்த ஆண்டு ஜனவரி முற்பாதியில் மட்டும் இந்தியா 9,300 டன்னுக்கும் அதிகமான காப்பியை ஏற்றுமதி செய்துள்ளது. இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவிடமிருந்து அதிகளவில் காப்பியை வாங்குகின்றன.

இந்தியக் காப்பியின் தனித்துவமான சுவைக்கு அதிகரித்துவரும் உலகளாவிய தேவை இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

இந்தியக் காப்பி உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு அரபிகா, ரோபஸ்டா வகைகள். இவை பெரும்பாலும் வறுக்காமல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வறுத்த காப்பி, உடனடி காப்பி போன்றவற்றுக்கும் தேவை அதிகரித்து, ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

உள்நாட்டிலும் காப்பி குடிப்பது அதிகரித்து வருகிறது. தேநீரைவிட காப்பி அருந்தும் போக்கு கூடி வருகிறது.

2012ல் 84,000 டன்னாக இருந்த உள்நாட்டு காப்பி நுகர்வு அளவு, 2023ல் 91,000 டன்களாக அதிகரித்துள்ளது.

இந்தியக் காப்பி பெரும்பாலும் வளமான மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பயிராகிறது. காப்பி உற்பத்தியில் கர்நாடகா முன்னிலை வகிக்கிறது, 2022-23ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் காப்பி உற்பத்தி 248,020 மெட்ரிக் டன்னாக இருந்தது. அடுத்த நிலைகளில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

வளர்ந்து வரும் உள்நாட்டு, அனைத்துலகத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்தியக் காப்பி வாரியம், ஒருங்கிணைந்த காப்பி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

விளைச்சலை மேம்படுத்துதல், காப்பி பயிரிடுவதை விரிவுபடுத்துவது, நிலைத்தன்மையான காப்பி வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற திட்டங்கள், உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், இந்தியக் காப்பியின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, கூர்க் பள்ளத்தாக்கில் காப்பி வாரியம், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகவை ஆகியவற்றின் ஆதரவுடன் கிட்டத்தட்ட 150,000 பழங்குடியினக் குடும்பங்கள் காப்பி உற்பத்தியை 20 விழுக்காடு அதிகரித்துள்ளன.  

குறிப்புச் சொற்கள்