புதுடெல்லி: பாரம்பரிய இனிப்புப் பலகாரம்போன்று வடிவமைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வாய்க்குள் வெடித்ததில் இந்திய ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்தனர்.
காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காகச் சில கிராமப்புறங்களில் பட்டாசுகள் அல்லது கல்குவாரிகளிலிருந்து பெறப்படும் வெடிமருந்தை மாவு உருண்டைகளுக்குள் வைத்து அத்தகைய குண்டுகளைத் தயாரிக்கின்றனர்.
சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்டு, முழுமையாக உண்ணப்படும் மென்மையான, உருண்டையான ரசகுல்லா இனிப்பைப்போலவும் அவை காட்சியளிக்கின்றன.
உயிரிழந்தவர் 35 வயது ராஜேந்திர பரோட்டியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் நவம்பர் 10ஆம் தேதி குளிர்காயும் நெருப்பைச் சுற்றி அவர் அமர்ந்திருந்தபோது, சக கிராமவாசி ஒருவர் கொண்டுவந்த அந்த இனிப்பை மற்றொருவர் அவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
“காட்டுப் பன்றிகளைக் கொல்ல அப்பகுதிப் பழங்குடியினர் சிலர் பயன்படுத்தும் வெடிகுண்டு அவரிடம் கொடுக்கப்பட்டது. அது அவரது வாய்க்குள்ளேயே வெடித்தது,” என அவ்வட்டாரக் காவல்துறை அதிகாரி ரேகா சிங் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பரோட்டியா உயிரிழந்தார். இரு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள்மீது நோக்கமில்லா மரணம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொலைசெய்யும் நோக்கத்துடன் இது நடந்ததா, விஷமத்தனமான செயலா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
