கருவிலேயே குழந்தையின் முதுகுத் தண்டுவட குறைபாட்டைச் சீரமைத்து இந்திய மருத்துவர்கள் சாதனை

கருவிலேயே குழந்தையின் முதுகுத் தண்டுவட குறைபாட்டைச் சீரமைத்து இந்திய மருத்துவர்கள் சாதனை

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

16 Nov 2026 - 3:27 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மருத்துவர்கள் 25 வாரக் கருவிலிருந்த குழந்தையின் முதுகுத் தண்டுவடக் குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகச் சீரமைத்துச் சாதனை படைத்துள்ளனர்.

நாட்டிலேயே இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை ஏறக்குறைய ஆறு மணி நேரம் நீடித்தது.

குழந்தையின் தொடக்கக்கால வளர்ச்சியின்போது நரம்புக் குழாய் (Neural tube) முழுமையாக மூடாததால் ஏற்படும் ‘மையலோமெனிங்கோசீல்’ (Myelomeningocele) எனப்படும் தீவிரமான முதுகுத்தண்டுவடக் குறைபாட்டைக் களைவதற்காக இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தக் குறைபாட்டால் குழந்தையின் முதுகுத்தண்டுவடம், நரம்புகள் வெளியே தெரிவதால், பிற்காலத்தில் பக்கவாதம், மூளையில் நீர் கோத்தல், சிறுநீர் கட்டுப்பாடின்மை போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருந்தது.

வழக்கமாக இத்தகைய குறைபாடுகளுக்குக் குழந்தை பிறந்த பிறகே அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், கருப்பையில் இருக்கும்போதே நரம்புகள் மேலும் சேதமடைவதைத் தடுக்கும் நோக்கில், ஐந்து வார காலத் துல்லியமான திட்டமிடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறியல், மயக்கவியல், ‘பிளாஸ்டிக்’ அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு, அதிநவீன நுண்ணோக்கி, தொடர் ‘அல்ட்ராசவுண்ட்’ கண்காணிப்புடன் இச்சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தது. தற்போது தாயும் கருவிலுள்ள குழந்தையும் நலமாக உள்ளனர்.

இந்திய அரசின் மருத்துவத் திட்டத்தின்கீழ், ஏழை எளிய குடும்பங்களும் பயன்பெறும் வகையில் இந்த உயர்தர அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்