தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15 மாத சரிவில் இந்தியப் பொருளியல்

2 mins read
683192c5-e35b-4f35-b323-d3761fb55a8e
ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் இந்தியப் பொருளியல் 6.7 விழுக்காட்டுக்குச் சுருங்கியது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளியல் வளர்ச்சி சுருங்கி 6.7 விழுக்காட்டுக்கு இறங்கி உள்ளது.

இதனை மத்திய அரசாங்கத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தெரிவித்தது.

ஏப்ரல் - ஜூன் மாத காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.7 விழுக்காடு, கடந்த ஐந்து காலாண்டுகளில், அதாவது 15 மாதங்களில் மிகக்குறைவான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

2023 முதல் காலாண்டில் 8.2% ஆக இருந்த வளர்ச்சி 1.5% சரிந்துள்ளது. மேலும், முந்திய காலாண்டான இவ்வாண்டின் ஜனவரி-மார்ச்சில் 7.8% வளர்ச்சி பதிவானது.

வேளாண் துறை வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கம் பொருளியல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 3.7 விழுக்காடாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 2.0 விழுக்காட்டுக்கு இறங்கியது.

இது நாட்டின் பொருளியலில் அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, உற்பத்தித் துறையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 7% வளர்ச்சி பதிவாகி உள்ளது. இது 2023 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பதிவான 6.2 விழுக்காட்டைவிட 0.8% அதிகம்.

பொருளியல் வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ள நிலையில் இது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் உள்ள இந்திய பங்குச்சந்தை பொருளியல் சரிவு தொடர்பான புள்ளிவிவரத்தால் திங்கட்கிழமை கடும் சரிவைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவைச் சந்தித்தாலும் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் வேகமாக வளரக்கூடிய பொருளியல் நாடாக இந்தியா இன்னும் திகழ்கிறது. உதாரணத்திற்கு, சீனாவின் ஏப்ரல்-ஜூன் காலாண்டின் பொருளியல் வளர்ச்சி 4.7 விழுக்காடு மட்டுமே.

குறிப்புச் சொற்கள்