புதுடெல்லி: முதல் காலாண்டில் 7.8 விழுக்காடு வளர்ச்சி கண்டபோதும் நடப்பு 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சி 6.5 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.
இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு இறக்குமதி வரியே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஏடிபி வெளியிட்ட ‘ஆசிய வளர்ச்சி முன்னுரைப்பு’ அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளியல் ஏழு விழுக்காடு வளரும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பானது அடுத்த நிதியாண்டிற்கான பொருளியல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என செப்டம்பர் மாதத்திற்கான ஆசிய வளர்ச்சி முன்னுரைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
ஏற்றுமதி குறையும் என்பதால் அது அடுத்தடுத்து இரு நிதியாண்டுகளிலும் பொருளியல் வளர்ச்சியைப் பாதிக்கும் என அது குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய அரசாங்கம் பொருள், சேவை வரிகளை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளதால் வரி வருவாயும் குறையும். அதனால், வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிட்டபடி 4.4 விழுக்காட்டைக் காட்டிலும் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும், அவ்விகிதம் 2025 நிதியாண்டில் பதிவான 4.7 விழுக்காட்டைவிட குறைவாகவே இருக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில் 0.6 விழுக்காடாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது, இந்த நிதியாண்டில் 0.9 விழுக்காடாகவும் அடுத்த நிதியாண்டில் 1.1 விழுக்காடாகவும் கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பணவீக்கத்தைப் பொறுத்தமட்டில், உணவுப்பொருள்களின் விலையானது எதிர்பார்த்ததைவிட வேகமாகக் குறைந்ததால், நடப்பு நிதியாண்டில் 3.1 விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அடிப்படைப் பணவீக்கமானது நான்கு விழுக்காட்டை ஒட்டியே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டு அடிப்படையில் ஒப்புநோக்க, பயனீட்டாளர் பணவீக்கமானது இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 2.4 விழுக்காடாகக் குறைந்தது.
இதற்கிடையே, நிலையற்ற உலகளாவிய வணிகச் சூழல் தொடர்வதால் அந்நிய நேரடி முதலீடும் அதிகரிக்க வாய்ப்பு குறைவு என்று அண்மையில் வெளியான ஆசிய வளர்ச்சி முன்னுரைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.