புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் இயந்திர மனிதனுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
தலையில் ஒரு கேமராவைக் கட்டிக்கொண்டு தங்களுடைய அன்றாட வேலைகளைக் காணொளியாகப் பதிவுசெய்வதுதான் ஏஐ பயிற்சியாளர்கள் எனக் குறிப்பிடப்படும் இவர்களின் அன்றாடப் பணி.
இத்தகைய ஒருமணி நேர காணொளிக்கு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மூன்று அமெரிக்க டாலர் வரை தருகின்றன.
நாம் சாதாரணமான காணொளியாகக் கருதும் இவை, அந்நிறுவனங்களுக்கு விலைமதிப்பற்ற தரவுகளாக அமைகின்றன.
அடுத்த கால் நூற்றாண்டில் உலகெங்கும் இயந்திர மனிதர்களுக்கான சந்தை உச்சம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2050ஆம் ஆண்டில் உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இயந்திர மனிதர்கள் பயன்பாட்டில் இருக்கும் என அனைத்துலக முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
வீட்டில் உணவு, காப்பி தயாரிப்பது, துணிகளை மடித்து வைப்பது, தரையைச் சுத்தப்படுத்துவது என அனைத்து வீட்டு வேலைகளைச் செய்யும் வகையில் அந்த இயந்திர மனிதர்களைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதில் மேற்குறிப்பிட்ட காணொளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் உள்ள ‘ஆப்ஜெக்ட்வேஸ்’ (Objectways) போன்ற முன்னணித் தரவு நிறுவனங்கள் இந்தக் காணொளிகளைச் சேகரித்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக அடுக்குமாடிக் குடியிருப்பு அறைகள் போன்று அரங்குகள் அமைத்து, ஏராளமான ஊழியர்கள் கேமராக்களை நெற்றியில் பொருத்திக்கொண்டு பலமணி நேரக் காணொளிகளைப் பதிவுசெய்கிறார்கள்.
இதன்மூலம் ஏஐ தரவுகளை உருவாக்கும் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உயர்நிலைப் பணியிடங்களில் வேலை இழப்புகள் ஏற்படுவது ஒருபுறமிருக்க, இந்தியாவின் 49 கோடி முறைசாராத் தொழிலாளர்களுக்கு இத்தொழில்நுட்பம் எவ்வாறு உதவப்போகிறது என்ற கேள்விக்கான பதில் இன்னும் ஆழமாக விவாதிக்கப்படவில்லை என்கிறது இந்திய அரசாங்கம்.
“வழக்கமாகச் செய்யும் வீட்டு வேலையை ஒருமணி நேரக் காணொளியாகப் பதிவுசெய்ய வேறு யார் ரூ.250 கொடுப்பார்கள்?” என்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி நாகிரெட்டி ஸ்ரீரம்யசந்திரா.
ஆயினும், இயந்திர மனிதர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கான இந்தப் பயிற்சி எதிர்கால வேலைப் பறிப்புக்கான அடித்தளமாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளதாக பொருளியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

