மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க நெருக்கடிகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்ததால், வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. வெளிநாட்டு நிறுவன முதலீடுகளின் தொடர் வரத்து, பங்குச் சந்தைக்கு ஆதரவளித்தபோதிலும், இந்தச் சரிவைத் தடுக்க முடியவில்லை.
சவுதி அரேபியாவின் எரிசக்திக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்ததாலும், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும் அனைத்துலக எண்ணெய் விநியோகத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை பீப்பாய்க்கு 92 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, வெள்ளிக்கிழமை சுமார் 95.7 டாலராக உயர்ந்தது.
இதற்கிடையே, உணவுப் பொருள்களின் விலை உயர்வால் கடந்த அக்டோபர் மாத சில்லறைப் பணவீக்கம், இந்திய ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பான 6 விழுக்காட்டைத் தாண்டியுள்ளதாக வியாழக்கிழமை வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன. இது வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
“அண்மைய ஏற்றங்களுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் குறுகிய காலத்தில் சந்தையைப் பாதிக்கக்கூடும். இருப்பினும், நிறுவனங்களின் வலுவான வருவாய் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் மீள்வருகை ஆகியவற்றால் நடுத்தர மற்றும் நீண்ட காலப் போக்கு சிறப்பாகவே உள்ளது,” என்று ‘ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச்’ நிறுவனர் ஜி. சொக்கலிங்கம் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை மட்டும் நிகர அளவில் 78.31 பில்லியன் ரூபாய் (832.71 மில்லியன் டாலர்) மதிப்பிலான இந்தியப் பங்குகளை வாங்கியுள்ளனர். இது தொடர்ந்து ஒன்பதாவது அமர்வாகப் பதிவான நிகரக் கொள்முதலாகும். இதன் மூலம் நவம்பர் மாத வெளிநாட்டு முதலீட்டு வரத்து 8 பில்லியன் டாலரை எட்டியுள்ளது; 2020 டிசம்பருக்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச மாதாந்திர முதலீடு இதுவாகும்.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, செப்டம்பர் காலாண்டு லாபம் நான்கு மடங்கு உயர்ந்ததைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ்’ நிறுவனப் பங்குகள் 11.1 விழுக்காடு ஏற்றம் கண்டன.
