பெங்களூரு: இரண்டு வயதில் குழந்தைகள் தெளிவாகப் பேசினாலே போதும் என்று பெற்றோர் நினைக்கும் நிலையில், அந்த வயதில் தபலா கருவியை இசைத்து அசத்துகிறார் இந்தியச் சிறுமி ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே.
கர்நாடகாவைச் சேர்ந்த அச்சிறுமி, மூன்று வயதை எட்டிப்பிடிக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஆனால், இப்போதே 12 தாளங்களை ஒரே நேரத்தில் உச்சரித்துக்கொண்டு, தபலாவிலும் அவற்றை இசைத்துச் சாதனை படைத்துள்ளார்.
கர்நாடக இசையில் ‘தாளம்’, அதன் ‘போல்ஸ்’ எனப்படும் இசைச் சொற்களைச் சரியாக உச்சரித்து வாசிப்பது மிகவும் கடினம். அனுபவம் வாய்ந்த இசைப் பயிற்சியாளர்களுக்குக்கூட இந்த நுட்பம் வசப்பட பல ஆண்டுகள் ஆகும். ஆனால், சிறுமி ஸ்வர்ஸ்ரீக்கு இது கைவந்த கலையாக உள்ளது.
இக்குழந்தையின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், இந்தியச் சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
ஸ்வர்ஸ்ரீ தபலா வாசிக்கும் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
