புதுடெல்லி: இந்தியாவின் ஓலா இலெக்ட்ரிக் (Ola Electric) மின்ஸ்கூட்டர் நிறுவனத்திடம் அந்நாட்டின் முக்கிய அரசாங்க அமைப்பு ஒன்று விசாரணை நடத்தவுள்ளது.
பொருள்களுக்கும் சாதனங்களுக்கும் சான்றிதழ் வழங்கும் இந்திய விதிமுறைப் பிரிவு (Bureau of Indian Standards) விசாரணையை மேற்கொள்ளும், என்டிடிவி போன்ற ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டன.
ஓலா இலெக்ட்ரிக் மேல் என்றும் இல்லாத அளவில் 10,000 புகார்கள் தன்னிடம் வந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் மத்திய பயனீட்டாளர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கைக் குறிப்பு அனுப்பியது. 99.1 விழுக்காட்டுப் புகார்கள் தீர்த்துவைக்கப்பட்டதாக இந்தியாவின் முன்னணி மின்ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஓலா பின்னர் தெரிவித்தது.
அதனையடுத்து முழு விசாரணை நடத்துமாறு சிசிபிஏ, இந்திய விதிமுறைப் பிரிவைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவின் பயனீட்டாளர் விவகாரச் செயலாளரான நிதி காரே வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) அவ்வாறு கூறினார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்ட கேள்விகளுக்கு ஓலா உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
புகார்களில் பெரும்பாலானவை சிறிய பிரச்சினைகளுக்கானவை என்று ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் சென்ற வாரம் சொன்னார். கருவிகள் சரியாக பொருத்தப்படாதது, வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தத் தெரியாதது போன்ற பிரச்சினைகள்தான் மூன்றில் இரு பங்குப் புகார்களில் இடம்பெற்றன என்று அவர் கூறினார்.