அவசரகால எரிவாயுக் கட்டுப்பாடுகளை நீக்கியது இந்திய அரசு

அவசரகால எரிவாயுக் கட்டுப்பாடுகளை நீக்கியது இந்திய அரசு

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

06 Jul 2026 - 7:13 pm

2 mins read

புதுடெல்லி: அவசரகால இயற்கை விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இயல்புநிலை திரும்பியதை அடுத்து, கட்டுப்பாடுகளை நீக்குவதாக இந்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு மேலாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் இந்தியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் முடங்கியது.

உலகின் மூன்றாவது ஆகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி, நுகர்வு நாடாக உள்ளது இந்தியா.

தனது கச்சா எண்ணெய்த் தேவையில் 88 விழுக்காட்டையும் இயற்கை எரிவாயுத் தேவையில் ஏறக்குறைய 50 விழுக்காட்டையும் இறக்குமதி மூலம்தான் அந்நாடு ஈடுகட்டி வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஆசிய நாடுகளின் பங்களிப்பு 45 விழுக்காடாகும்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து நிலைகுத்தியதால் இந்தியா நேரடியாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ், அவசரகால இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணையைக் கடந்த மார்ச் 9ஆம் தேதி இந்திய அரசு பிறப்பித்தது.

அதில், வீடுகளுக்கான குழாய் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி), போக்குவரத்துக்கான சிஎன்ஜி எரிவாயு, சமையலுக்கான எல்பிஜி எரிவாயு உற்பத்தி, விநியோகம் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயு விநியோகம் குறைக்கப்பட்டது. மேலும், எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் இயன்றவரை தங்களது சராசரி எரிவாயுப் பயன்பாட்டை ஏறத்தாழ 65 விழுக்காடாகக் குறைக்கவும் உத்தரவிடப்பட்டது.

தற்போது மத்திய கிழக்கில் அமைதி திரும்பியதை அடுத்து, அவசரகாலக் கட்டுப்பாடுகளை இந்திய அரசு முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணை, 2026ல் இடம்பெற்றுள்ள மூன்று அவசரகால உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஹோர்முஸ் நீரிணைஇயற்கை எரிவாயுகப்பல்போக்குவரத்துகச்சா எண்ணெய்