கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி

நான்காண்டுத் தடை முடிவிற்கு வருகிறது

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி

2 mins read
46df103e-ea5d-4fca-b5b7-77f891afdae6
நடப்பாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி இந்திய உணவு கழகத்தின் மொத்த கோதுமை இருப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: மின்ட்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் உள்நாட்டுச் சந்தையை நிலைப்படுத்த முடியும் என்றும் விவசாயிகளுக்கு லாபகரமான வருமானத்தை உறுதிசெய்ய முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என மத்திய உணவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்களிடம் நடப்பு நிதியாண்டிற்கான கோதுமை இருப்பு 75 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஏறக்குறைய 32 லட்சம் டன் அதிகமாகும்.

நடப்பாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி இந்திய உணவுக் கழகத்தின் மொத்த கோதுமை இருப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியத் தொகுப்பில் மொத்த கோதுமை இருப்பு தற்போது 182 லட்சம் டன்னாக இருக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, கோதுமையை ஏற்றுமதி செய்வதால் உள்நாட்டு உணவுப் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய உணவு அமைச்சு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, முதற்கட்டமாக 25 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அந்த அமைச்சு கூறியது.

கோதுமை விதைப்புப் பரப்பளவு 328.04 மில்லியன் ஹெக்டரிலிருந்து 334.17 மில்லியன் ஹெக்டராக அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம்.

முன்னதாக, உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பைச் சமாளிப்பதற்காக கடந்த 2022 மே மாதத்திலிருந்து கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது.

இதனிடையே, கூடுதலாக ஐந்து லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யவும் இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, 15 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மட்டுமே அரசு அனுமதித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்