புதுடெல்லி: இந்திய அரசின் ஒப்பந்தங்களில் கலந்துகொள்ள சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க அந்நாட்டு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய-சீன ராணுவப் படைகளுக்கு இடையே 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சண்டை மூண்டது. அதனைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதித்தது
அதன் ஒரு பகுதியாக, இந்திய அரசுத் திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க விரும்பும் சீன நிறுவனங்கள், இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்து, அரசியல், பாதுகாப்பு ரீதியிலான ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது, இருநாடுகளுக்கு இடையிலான மோதல் போக்குக் குறைந்து, தூதரக ரீதியிலான உறவு மேம்பட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தக உறவையும் மீட்டெடுக்க இந்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் எனினும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம்தான் இறுதி முடிவு எடுக்குமெனவும் தகவல் அறிந்த இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசாங்கத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாலும் உதிரிபாகப் பற்றாக்குறை நிலவுவதாலும் சீன நிறுவனங்கள்மீதான தடையை நீக்கப் பரிசீலிக்கப்பட்டுள்ளது என்றும் அவை கூறுகின்றன.
மோடியே காரணம்: அமெரிக்க அமைச்சர் சாடல்
இதற்கிடையே, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு இந்தியப் பிரதமர் மோடியே காரணம் என அமெரிக்க அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் தெரிவித்துள்ளார்.
‘ஆல்-இன்’ வலையொளி நிகழ்ச்சியில் பேசிய லூட்னிக், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்துள்ளது எனக் கூறிய அவர், அந்நாடுகளுக்கு முன்பே இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பியிருந்ததாகவும் அவர் கூறினார்.
“அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேசாததே வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்படாததற்கு காரணம். இரு தலைவர்களும் ஒப்பந்தம் குறித்து முடிவு எடுத்தால்தான் அதை இறுதிசெய்ய முடியும்,” என அமெரிக்க அமைச்சர் குறிப்பிட்டார்.

