சென்னை: இந்தியாவில் உள்ள குடும்பங்களிடம் 34,600 டன் தங்கம் உள்ளது.
உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தைப் பயன்படுத்துவதில் இந்தியாதான் இருக்கிறது.
வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்ற முனைப்பில் சிறுக சிறுக பணம் சேர்த்து வாங்கும் வழக்கம் இன்றளவும் இந்திய குடும்பங்களில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளின்போது தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது.
இந்தியாவில் தங்க உற்பத்தி மிகக்குறைவாக இருப்பதால், தங்க நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்ய பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
இன்று தங்க விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்திய குடும்பங்களில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கையோ, அதன் மீதான விருப்பமோ கொஞ்சமும் குறையவில்லை என்பதை பல தங்கம் சார்ந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த வகையில் உலகத் தங்க மன்றம் ஒரு புள்ளிவிவரத்தைத்தான் அண்மையில் வெளியிட்டது.
அதில், இந்திய குடும்பங்களில் ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 34,600 டன் தங்கம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அது நகையாகவோ, நாணயமாகவோ, கட்டியாகவோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் பார்க்கும்போது, அதன் மதிப்பு ஏறத்தாழ ரூ.337 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்தத் தங்க இருப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 88.8 விழுக்காடு எனவும், இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்க இருப்பு என்பது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்க இருப்புகளைவிட அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பு, அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு உலகத் தங்க மன்றம் இதேபோல் வெளியிட்டிருந்த புள்ளிவிவரங்களில் இந்திய குடும்பங்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஈராண்டுகளில் இந்தியக் குடும்பங்களின் தங்க இருப்பு கிட்டத்தட்ட 9,600 டன் வரை அதிகரித்துள்ளது.